இரவீந்தரநாத் தாகூர் (வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861-ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிரியர் இவரே ஆவார். இந்தியாவின்தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பதுண்டு. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களாவங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும்,நாடகமும் வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளைப் புகுத்தினார். இவரதுபுதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள்என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.
இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.
தொடக்க காலம் (1861-1901)[தொகு]
இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டுமே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும்,சமஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.
இரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டண், லண்டனில் (Brighton, London) உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் லண்டன் சர்வகலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த்என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.
நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்[தொகு]
- ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
- தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
- நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.
சாந்திநிகேதன்[தொகு]
1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.
இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனதுநைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.
நோபல் பரிசு[தொகு]
1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.
1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.
இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.
1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.
இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.
1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.
பயணங்கள்[தொகு]
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.
இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.
ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.
1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர்ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.
இறப்பு
1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார். சைனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.
1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.
Thankyou wikipedia