விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கணணி வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து தற்போது விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்பறைகளை டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கோப்பறையில் மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.
2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில் எளிதாக அதில் வேலை செய்திட இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்திடவும்.
3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம் மிகத் தெளிவான துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த வசதி மடிக்கணணிகளில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம் அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.
4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம்.
எடுத்துக்காட்டாக முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.
5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.
6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கணணியிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால் பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர்.